சனி, 21 நவம்பர், 2009

மறந்த கடமைகள்

அழுகையோடு பிறந்தேன்
எனை ஆசுவாசப்படுத்தியது
உறவுகளின் மகிழ்ச்சியொலி;
பள்ளி கண்டு பயந்தேன்
எனக்கு தைரியம் அளித்தது
நண்பர்களின் கூட்டு;
விளையாடும் போது விழுந்தேன்
கைத்தட்டி ஊக்கப்படுத்தியது
தெரியாத கரங்கள்
சபை கண்டு திணறி நின்றேன்
தண்ணீர் தந்து சாந்தப்படுத்தியது
அறியாத முகங்கள்
உறவுகள், நண்பர்கள், தெரியாத கரங்கள்,
அறியாத முகங்கள் தேவைப்பட்டது
நான் வளரும் வரை!
வளர்ந்த பின், தானாய் வளர்ந்த
இருமாப்போடு, தன்னலம் மிஞ்சி
தனியாய் நிற்கிறேன்
சமுதாய கடமை மறந்து

- ந.மகாராஜன்

வியாழன், 19 நவம்பர், 2009

சென்னையில் மழை

கருமேகம் மலர் தூவ
ஓடும் ரயில் இசை பாட;
சாரல் என்னைத் தீண்டிச் செல்ல
தென்றல் என்னை முத்தமிட;
நிற்காமல் ஓடும் நீரும்
புல் நுனியில் மின்னும் மணியும்
இணைந்து என்னை குதூகலிக்க;
துள்ளலாய் ரயில் விட்டு இறங்கி
பரவச மிகுதியால் பாடல் முனுமுனுத்து
சில்லென்ற காற்றை சிலாகித்து ரசித்து;
வீதி வந்த போது சுறீல் என வலித்தது,
தலை மேலே தார்பாய் இழுத்து பிடித்து
அமர்ந்து இருந்த சாலையோர சிறார்களை கண்டு.

- ந.மகாராஜன்