ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

எங்கே போகிறோம் நாம்

நான் எழுதுவதை நிறுத்தி ஆறு வருடங்கள் ஆகின்றன, எனை மீண்டும் எழுத வைத்தமைக்கு தோழர் ராஜூமுருகனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அவரது Joker திரைப்படம் பார்த்தேன், எனை மிகவும் பாதித்தது. என்ன செய்து கொண்டு இருக்கிறோம் நாம் என அனைவரையும், கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. விவசாய நாடு என கூறும் நம் தேசத்தில் 1995 முதல் 2014 வரை மூன்று லட்சம் விவசாயி தற்கொலை செய்து இருக்கிறான். யாரோ ஒருவன் மரணத்தால் நமக்கு என்ன வந்தது. என் வீட்டில் யேதும் பினம் விழாத வரை, எனக்கு வலிக்க போவது இல்லை எனும் மனநிலையில் தான் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம். வாழ தான் வழி இல்லை எனில் இங்கு சாகவும் வழி இல்லை என உணர்த்தியது.  100 கோடிக்கும் மேல் மக்கள் தோகை உள்ள என் தேசத்தில், ஒலிம்பிக்கில் வாங்கும் ஒரு வெங்கல பதக்கம் நம்மை குதூகலிக்க வைக்கிறது. ஏன் இங்கு திறமைக்கு பஞ்சமா? வெற்றி பெற நமக்கு குறிக்கோள் இல்லையா? நாம் வாங்கும் ஒவ்வொரு பதக்கத்திற்கும் பின்னாள் இருப்பது, ஒவ்வொரு தனி மனிதனுடைய வேர்வை. ஒரு தாய் தந்தையுடைய தியாகம். பல அவமானங்கள் கடந்து, இன்னல் தாண்டி, ஒலிம்பிக்கில் பங்கேற்பதே பல இந்தியர்களின் வெற்றியாய் இங்கு நிலைமை மாறி உள்ளது. பதக்கம் வாங்கிய உடன் உரிமை கொண்டாடும் மாநில அரசுகள், போராட்டத்தின் போது வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தது. இதையெல்லாம் சகித்துக் கொள்ள நாமும் பழகி விட்டோம்.
     இங்கு ஒரு ரூபாய்க்கு வாங்கிக்குடிக்கும் தண்ணீர் பாக்கெட்டை வெளியேற்ற கட்டணக் கழிப்பிடத்தின் கட்டணம் ரெண்டு ரூபாய். அரசாங்க வேலைக்கு லஞ்சம் கொடுத்து சேர தயாராய் காத்து இருக்கும், என் பல லட்சக் கணக்கான தோழர்களின் முதல் கடமை, கொடுத்த பணத்தை சம்பாதிப்பது மட்டுமே. சேவை மனப்பான்மை எப்படி வரும் இவர்களுக்கு. என் தேசத்தின் அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் இங்கு புறையோடி போய் இருக்கும் லஞ்சமே. லஞ்சம் வாங்கி சேர்த்த பணத்தை கௌரவமாய் என்னும் மனப்பான்மையே. இவருக்கு ரெண்டு வருமானம், சம்பளம் பாதி கிம்பளம் பாதி என பெருமையாய் கூறும் முட்டாள் நாம், அந்த திருட்டுக்கும் திருடனுக்கும் நாமும் ஒரு உடந்தை என்பதை எப்போது தான் உணரப் போகிறோமோ. நம் தன்மானத்தை வித்து, யாரையும் தட்டிக் கேட்கும் தகுதியை இழந்தே இந்த வேலையை வாங்குகின்றோம் என்பதை நாம் உணர்வது இல்லை.
     நம் நாட்டில் மின்சாரக் கட்டணம் கூடும். ஆனால் டிவியும், மிக்சியும், கிரைண்டரும் இலவசமாய் கிடைக்கும். ஆறாயிரம் ரூபாவை திருப்பி செலுத்த முடியாத விவசாயியை நடுரோட்டில் வைத்து அடித்து தூக்கு மாட்டவைப்போம், ஆறாயிரம் கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்த முடிந்தும் செலுத்தாத திருட்டுப் பயல்களை சலாம் போட்டு, பத்திரமாய் அனுப்பி வைப்போம். பெற்ற மகள் காதலித்ததனால் கௌரவம் போனது என அறுத்துப் போடுவோம், ஆனால் குடித்து விட்டு வேட்டி அவுருவது கூட தெரியாமல் அம்மணமாய் ரோட்டில் படுத்துக்கிடப்பது கௌரவக் குறைச்சல் அல்ல.  டோல் கேட்டுகளில் சுறண்டப் படும் போது கேள்வி எழுப்பும் துணிவில்லாத அரவாணிகள் நாம், வாழ வழி இல்லாம் அங்கு பிச்சை எடுக்கும் பாவப்பிறவிகளை அரவாணிகள் என எள்ளி நகையாடுவோம்.  
     சாதி, மதம், இனம், மொழி, தேசம், நான், எனது, எனப் பிரிந்து கிடக்கும் நாம், என்று உணரப்போகிறோம். நம் சந்ததிக்கு நாம் குடிக்க நல்லத் தண்ணீரோ, சுவாசிக்க நல்ல காற்றோ, உண்ண நல்லுணவோ, விளைவிக்க வளம் வாய்ந்த பூமியோ, நிழலுக்கு ஒதுங்க மரமோ, எதையும் விட்டுவைக்க போவது இல்லை என்பதை. பசியில் நம் குழந்தைகள் சாகும் போது அதை பார்த்து வேதனை பட நாம் இருக்கப் போவது இல்லை என்ற எண்ணமாய் இருக்கலாம். ஆனால் இது நம் வாழ்நாளிலேயே நாம் பார்க்கும் காலம் வரும். அந்த காலமும் வெகு தூரத்தில் இல்லை.

இப்படி சொல்பவர்களுக்கு நாம் இரண்டு பெயர் வைத்து இருக்கிறோம். ஒன்று போராளி. ஆம் இந்த போர்க்களத்தில் தினம் ஒரு வேளை உணவுக்கே போராட்டமாய் இருப்பதாலோ, இல்லை இந்த போர் ஒரு நாள் வரும் என பலருக்கும் எடுத்துச்சொல்வதாலோ இருக்கலாம். இன்னொரு பெயர், பிழைக்கத்தெரியாதவன். நான் நிச்சயம் போராளி அல்ல, சகிக்க கற்றுக்கொண்டதால். ஆனால் நிச்சயம் பிழைக்கத் தெரியாதவன். இந்த பினம் தின்னும், அடுத்தவர் இரத்ததை உணவாய் உருஞ்சும் அட்டைப்பூச்சிகளுக்கு மத்தியில். மாற்றம் ஒரு நாள் வரும், மனிதம் நிச்சயம் வெல்லும், அது வரை சகித்துக்கொண்டோ இல்லை எதையாவது பிடித்துக்கொண்டோ, நாளை இனிதாய் இருக்கும், அது வரை கடமை தவறாதே என்று காத்திருப்பதற்காகவாய் இருக்கலாம். எங்கே போகிறோம் நாம் என்று வருந்திக்கொண்டு. விடியல் வரும் எனும் நம்பிக்கையோடே. நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதும் என் ஆதங்கங்களை மீண்டும் நேரம் கிடைக்கும் போது கொட்ட வருகிறேன்.
                                          - ந.மகாராஜன்