காதலித்துப் பார் முதல் பாகத்திற்கு ( "http://apjmahakalam.blogspot.com/2009/10/blog-post.html" ) கிடைத்த ஆதரவு என்னை காதலித்துப் பார் இரண்டாம் பாகம் எழுத தூண்டியது. காதல் தன்னை தனக்கே உணர்த்தும் ஒரு கருவி என எழுதி இருந்தேன். எதையும் யாரையும் காதலிக்கலாம் என எழுதி இருந்தேன்.
காதல் என்பது அன்பு பாராட்டும் மனம் மட்டும் அல்ல அன்பை சமர்பிக்கும் பக்தி. இக்காலத்தில் பக்தி என அறியப்படும் பேதமை பற்றி பேசவில்லை நான். ஆச்சாரமாய் எழுந்து குளித்து முடித்து நெற்றி நிறைய பட்டை இட்டு, கடவுளை வணங்கி பாடுவதா பக்தி. நம்மையே முழுமையாய் சமர்பிப்பது அல்லவா பக்தி என்று நமது பக்தி மார்கம் கூறுகிறது. செய்தி தாள்களில் இன்று சர்வ சாதாரணமாய் அடிபடும் ஒரு செய்தி, காதலித்த பெண் முகத்தில் acid வீச்சு என்று. எப்படி இது சாத்தியம் எனத் தெரியவில்லை. அவன் செய்தது காதலாக படவில்லை, அது ஒரு வியாபாரம். நான் உன்னை காதலித்தேன், நீ என்னை காதலி என்ற பண்ட மாற்று முறை போன்றது. இதுவா காதல். வெட்கித்தலை குனிய வேண்டிய முன்னுதாரணம் அல்லவோ இது.
காதலை சொல்வதற்கு வரைமுறையோ ஒழுங்கு முறைகளோ கிடையாது. போலித்தனம் இல்லாத உள்ளத்து உள் உணர்வை, உண்மையான அன்பினை, எதையும் எதிர்பார்க்காமல் எடுத்துவைப்பதுவே காதல். காரி உமிழ்ந்தும், எட்டி உதைத்தும் கூட காதலை சொல்லலாம். செயலின் நோக்கம் பெரிதே அன்றி செயல் அல்ல. நாமோ செயலை மட்டும் இறுக்கிப்பிடித்து நோக்கத்தை காற்றில் பறக்க விடுகிறோம். என்னை மிக வேதனை படுத்திய செயல்களில் ஒன்று இது. காரி உமிழ்ந்து காதலை சொல்ல முடியுமா. என்ன ஒரு கேலிக்கூத்து என கேள்விகள் வரலாம். நம் புராணக்கதைகளிலேயே உதாரணம் உண்டு.
இறைவனுக்கு பசிக்கும் என பன்றியை அடித்து, வேகவைத்து இருகையேந்தி, வாயில் நீர் எடுத்து, காதினில் மலர் சூடி இறைவனை தேடி வந்து, தன் கால் செருப்பால் தலை துடைத்து, வாய் நீரை மேல் உமிழ்ந்து, பன்றி கறியை சமர்பித்து பக்தி செலுத்திய கதைகள் உண்டு. அதோடு நிற்கவில்லை அவர், இறைவனுக்கு கண்களில் இரத்தம் வடிவதை கண்டு தன் கண்களையே பிடுங்கி வைத்து இரத்ததை நிறுத்தினாராம், நமது கண்ணப்ப நாயனார். நாத்தீகம் பேசும் நீ ஆத்தீகன் ஆனது எப்போது? இதெல்லாம் சாத்தியமே அல்ல, நடக்கிற காரியமா இது? என்பது போன்ற குதர்க்கக் கேள்விகள் வேண்டாம். கதையின் கருத்து தூய்மையான அன்பு மட்டுமே.
அன்பு கொண்டவருக்கு ஒரு துன்பம் என்றதும் எதுவும் அவர் சிந்திக்கவில்லை. துன்பம் துடைக்கும் எண்ணம் மட்டுமே அவருக்கு இருந்தது. தமது செய்கைக்கு பிரதி பலன் தேடவில்லை அவர். அதுவே உண்மை காதல், தூய்மையான பக்தி, களப்படம் இல்லாத அன்பு. அந்த அன்பு இன்றைய காதலில் இருக்கிறதா என்ற அய்யப்பாடு எனக்கு உள்ளது. தான் காதலித்த பெண் மற்றொருவனை விரும்பினால், தனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் இல்லை என்ற எண்ணமே இன்று மேலோங்கி இருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. “MY HAPPINESS LIES IN YOURS” என்று எத்தனை பேர் எண்ணுகிறோம் என்று தெரியவில்லை. இது சாதாரண காரியமும் அல்ல. ஆனால் இதல்லவோ உண்மை காதல்.
பைபிளில் ஒரு வாசகம் உண்டு. “‘Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind.' This is the first and greatest commandment. And the second is like it: 'Love your neighbor as yourself.' “(Matthew 22:37-39). காதலை இதை விட தூய்மையாய் பறைசாற்ற முடியுமா. நம் உண்மையான அப்பழுக்கற்ற அன்பினை பொழிவதே நம்மால் முடிந்த செயல். அந்த அன்பு ஏற்றுக்கொள்ளப்படுவதோ நிராகரிக்க படுவதோ நம் கைகளில் அல்ல. பிரதி எதிர்பார்க்காத அன்பே காதல். காதலித்து பார். “அன்புக்குமுண்டோ அடைக்கும் தாள்”. பரவட்டும் எட்டுத்திக்கும் அன்பின் மொழி. காதலித்துப் பார், ஒரு பெண்னை, பொருளை, பெற்றோரை, தாய் நாட்டை, பதவியை, பூமியை, இயற்க்கையை, எதையாவது ஒன்றய் காதலித்துப் பார். கண் முன்னே உலகம் விரியும். நம் மீதே நமக்கு நம்பிக்கை பிறக்கும். சாதனைகள் செய்திட மனது துடிக்கும். காதலிக்காக, பெற்றோருக்காக, தாய் நாட்டிற்காக நாம் காதலிக்கும் எதற்காகவும் எதையும் செய்திட ஆக்க சக்தி பிறக்கும்.
முடிப்பதற்கு முன்பு நான் வாசித்த கவிதைகளில் என்னை திரும்பி பார்க்க வைத்த கவிதைகளில் ஒன்று,
தவழந்து பழகும்
தென்றலின் மீது
நடந்து பழக ஆசை...
உனது புன்னகையால்...
மிதந்து பழகும்
இதயங்களோடு நானும்
இணைய ஆசை.....
மீண்டும் வருவேன், நேரம் கிடைக்கும் போது.
-ந.மகாராஜன்
வெள்ளி, 10 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)