செவ்வாய், 1 செப்டம்பர், 2009

தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம் (NREGA)

இந்த ஆண்டு நமக்கு எப்போதும் உற்ற தோழனாய் இருந்த பருவ மழையும் பொய்த்துப் போனது. அங்கங்கே விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகளும் வர தொடங்கியாயிற்று. ஊருக்கே உணவளிக்கும் நம் விவசாயிகள் இறப்பதென்பது, நம் நன்றியற்ற செயலுக்கு உதாரணம் ஆகாதா? அரசாங்க திட்டங்கள் நிச்சயமாய் உண்டு, ஆனால் அதை விளக்கிச் சொல்ல தான் ஆட்கள் இல்லை. தங்களுக்கு நியமாய் வந்து சேர வேண்டிய சலுகைகள் கூட என்ன என்று தெரியாமல் பலர் கோருவது இல்லை. நம் வரிப்பணமோ சேர கூடாத கைகளுக்கே சென்று சேரும் அவலம். 2006 இல் மத்திய அரசு நடைமுறை படுத்திய தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம், (National Rural Employment Guarantee Act) கிராமப்புரங்களில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள வேலையில்லா மக்களுக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியளிப்பதுடன், விவசாய தினக்கூலிகளுக்கு வேலைக்கு ஏற்ற கூலியை பஞ்சாயத்து தலைமை காரியாலயம் மூலமாக நிர்னயம் செய்கிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைமை காரியாலயமும் அதை நிர்வகிக்க Bharat Nirman Sewa Kendra வும் நிருவப்பட்டு, மெல்ல வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களை தினக்கூலி நிலையில் இருந்து சுய வேலைவாய்ப்பு நிலைக்கு உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்ட்த்தின் படி அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை அனுகி வேலைவாய்ப்பு உரிமை கோர முடியும். விண்ணப்பிப்பவர்களுக்கு வயதும், குடியுரிமையும் சரி பார்க்கப்பட்ட பின் வேலை வாய்ப்பு அட்டை வழங்கப்படும். வேலைவாய்ப்பு அட்டை வைத்து இருப்போர், பஞ்சாயத்தில் வேலைக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும், வழங்கத் தவறும் பட்சத்தில் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகை வழங்கப்பட வேண்டும். வேலைக்கு சேர்ந்தவுடன் அவர்களுக்கு ஊதியம் ஒவ்வொரு வாரமும் தபால் நிலைய அல்லது வங்கிக் கணக்குகளில் தவறாமல் வழங்கப்படும். 33 சதவிகித பெண்களுக்கான இட ஒதுக்கீடும் இத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு கிராமத்திற்கும் தேவையான அடிப்படை வசதிகளை, அந்த கிராமத்து மக்களைக் கொண்டே பஞ்சாயத்துக்கள் நிறைவேற்றிக் கொள்கின்றன. இத்திட்டத்தின் மூலமாக கிராமங்கள் வளர்வதுடன் வறுமையும் நீங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஓரே ஓரு குறை இத்திட்டம் சரியாக வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு சென்று சேர்ந்த்தா என்பதில் தான். மக்களே நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டி உள்ளதால் பலர், அறியாமையாலும், படிப்பறிவின்மையாலும் விண்ணப்பிப்பது இல்லை. பலருக்கு இத்திட்டம் இருப்பதே தெரியவில்லை. இத்திட்டம் உண்மையில் கடைநிலை மக்களுக்கும் சென்று சேரும் பட்ச்சத்தில், விவசாயிகள் தற்கொலை என்னும் செய்தியை இனி கேட்க வேண்டியது இருக்காது என நம்புவோமாக. இது போன்ற திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லுவதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாது. மேலும் விவரங்களுக்கு http://www.nrega.nic.in/ வலைப்பூவை அனுகவும். Jai Hind.